வியாழன், 15 மே, 2014

தர்மபுரி மாவட்டத்தில், மாற்றத்திறனாளிகள் பள்ளியில், தேர்வு எழுதிய, 24 மாணவ, மாணவிகளில், இருவர் மட்டுமே தேர்ச்சி பெற, அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் !

தர்மபுரி மாவட்டத்தில், மாற்றத்திறனாளிகள் பள்ளியில், தேர்வு எழுதிய, 24 மாணவ,
மாணவிகளில், இருவர் மட்டுமே தேர்ச்சி பெற, அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்,' என,தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கானசங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில், மொத்தம் தேர்வு எழுதிய, 24 மாணவ, மாணவிகளில், இருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதம் உள்ள மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெறாததற்கு, அரசு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம். இந்தப்பள்ளியில், மாணவர்கள்தேர்ந்து எடுத்துள்ள பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாமல், ஆண்டு முழுவதும்,அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்தினர். வணிகவியல், பொருளியல், கணக்கியல் பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. மாணவர்களின் நலன் கருதி, கடைசி மாதத்திலாவது, ஒப்பந்தஅடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து இருந்தால், மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க கூடும். ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து, எங்கள் சங்கம்
சார்பில், 2013, டிசம்பர், 14ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனுக்கள்அனுப்பியும், அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கால், 22 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

இதை போலவே, தர்மபுரி அரசு பார்வையற்றோருக்கான சிறப்பு ஆரம்ப பள்ளியிலும், ஒரு தலைமை ஆசிரியை மற்றும் ஒரு இசை ஆசிரியர் தவிர, மற்ற ஆசிரியர்
பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளது. அங்கேயே தங்கிப்படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவிகளை பாதுகாக்க, ஆயா பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது.இதுகுறித்தும், 2013, டிசம்பர், 14ம் தேதியன்றே, அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தோம். ஆனால்,இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம், சிறப்பு பள்ளிகளை, கல்வித்துறையின் கீழ் கொண்டு வராதது தான் காரணம். இந்த பள்ளிகள்,இன்று வரையிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுவதால் தான், அதிகாரிகள்,இதனை கவனிக்காமலேயே விட்டுவிட்டனர். எனவே, மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். மேலும், இந்த மெத்தன போக்குக்கு காரணமான அதிகாரிகள் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளை, கல்வித்துறையின் கீழ் கொண்டு வரநடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மே, 26ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன்ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.