சனி, 17 மே, 2014

கிருஷ்ணகிரி மலைக் கிராம அரசுப் பள்ளிகள் மீது கல்வி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவார்களா?

ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மீது அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டம் என இரண்டு உள்ளது.

இதில் கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 53 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 29 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளது. பிளஸ் 2 தேர்வை கிருஷ்ணகிரியில் 8101 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், 7428 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதே போல் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 5841 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4392 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஓசூர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. கெலமங்கலம் அரசு மாதிரி பள்ளி மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 90 சதவீதத்திற்கு மேல் 10 பள்ளிகளும், 80 சதவீதத்திற்கு மேல் 5 பள்ளிகளும், 70 சதவீதத்திற்கு மேல் 7 பள்ளிகளும், 40 முதல் 69 சதவீதம் வரை 6 பள்ளிகளும் தேர்ச்சி பெற்றுள்ளது.

இதில், தளி, மஞ்சநாயக்கனபள்ளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய 4 பள்ளிகளில் 60 சதவீதம் மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் பற்றாக்குறை

ஓசூர் கல்வி மாவட்டத்தில் சில பள்ளிகள் மலை கிராமங்களிலும், போக்குவரத்து வசதி குறைவான இடங்களிலும் உள்ளதால் இப்பள்ளிகள் மீது அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடம் கேட்டபோது, 2012 - 13 ம் ஆண்டின் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்து, அனைத்து பள்ளி தலைமையாசியர்களுக்கும் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தேர்ச்சி குறைவாக பெறும் பள்ளி ஆசிரியர்கள் மீது நடடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி கொண்டு வர தேவையான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

ஓசூர் கல்வி மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு ஆசிரியர் பற்றாக்குறையும், மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் காரணமாகும். அந்த பள்ளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மலைகிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் ஆசிரியர்கள், அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யவேண்டும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.