வெள்ளி, 16 மே, 2014

TRB PG TAMIL /TNPSC மெய் எழுத்துகள் -உச்சரிப்பு

மெய் எழுத்துகளை அவற்றின் உச்சரிப்பு அல்லது பிறப்பு அடிப்படையில் பல்வேறு வகைப்படுத்தலாம்.

ப,ம ஆகியவற்றை இரண்டு இதழ்களும் பொருந்த உச்சரிக்கின்றோம். ஆகவே இவற்றை ஈரிதழ் ஒலிகள் என்பர்.

வ வகரத்தை கீழ் உதட்டில் மேற்பல் பொருந்த உச்சரிக்கின்றோம். அதனால், இதனை உதட்டுப்பல் ஒலி என்பர்.

த,ந ஆகியவற்றை நுனி நா மேற்பல்லின் உட்புறத்தைப் பொருந்த உச்சரிக்கின்றோம்.அதனால் இவற்றை பல் ஒலிகள் என்பர்.

ல,ர.ற,ன ஆகியவற்றை நுனி நா நுனி அண்ணைத்தைப் பொருந்த உச்சரிக்கின்றோம்.அதனால் இவற்றை நுனி அண்ண ஒலிகள்
என்பர்.
ட,ண,ழ,ள ஆகியவற்றை நுனிநா மேல் நோக்கி வளைந்து நடு அண்ணத்தைத் தொட உச்சரிக்கின்றோம். அதனால் இவற்றை வளைநா ஒலிகள் என்பர்.

ச,ஞ,ய ஆகியவற்றை நடுநா நடு அண்ணத்தை தொட உச்சரிக்கின்றோம். அதனால் இவற்றை அண்ண ஒலிகள் என்பர்.
க,ங ஆகியவற்றை கடைநா கடை அண்ணத்தைத் தொட உச்சரிக்கின்றோம்.அதனால்,இவற்றை கடை அண்ண ஒலிகள் என்பர்.

ப,ம ஆகியவை ஈரிதழ் ஒலிகள் என்றோம்.இரண்டு இதழ்களும் ஒன்றோடு ஒன்று பொருந்த இவை இரண்டும்ஒலிக்கப்படுகின்றன. ஆயினும்,இவை இரண்டும் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன. அது ஏன்? உச்சரிக்கும் முறையில்உள்ள வேறுபாடே அதற்குக் காரணம். ப வை உச்சரிக்கும்போது இரண்டு உதடுகளையும் பொருந்த வைத்து வாய்க்குள்
காற்றைத் தடைசெய்து திடீரென வெளி விடுகின்றோம். காற்று வாயினாலேயே வெளிவருகின்றது, இவ்வாறு ஒலிக்கப்படுவதை வெடிப்பொலி அல்லது தடை ஒலி என்பர். க,ச,ட,த,ப,ற ஆகிய ஆறு வல்லினங்களும் இவ்வாறு ஒலிக்கப்படும் வெடிப்பொலிகள் ஆகும்.

ப் - ஈரிதழ் வெடிப்பொலி த் - பல் வெடிப்பொலி ற் - நுனி அண்ண வெடிப்பொலி ட் - வளைநா வெடிப்பொலி ச் - அண்ணவெடிப்பொலி க் - கடை அண்ண வெடிப்பொலி

ம -வை உச்சரிக்கும்போதும் இரண்டு இதழ்களையும் ஒன்றோடு ஒன்று பொருந்தவைக்கின்றோம்.ஆனால்,காற்றை காற்றை வாய்க்குள் தடை செய்யாமல் மூக்கு வழியாக வெளிச் செல்ல விட்டு இதனை உச்சரிக்கின்றோம்.இவ்வாறு ஒலிக்கப்படும் ஒலிகளை மூக்கொலி என்பர். ங, ஞ, ண, ந, ம, ன ஆகிய ஆறு மெல்லினங்களும்
மூக்கொலிகளாகும். மூக்கைப் பொத்திக்கொண்டு இவற்றை ஒலிக்க முடியாது.

ம் - ஈரிதழ் மூக்கொலிந் - பல் மூக்கொலின் - நுனி அண்ண மூக்கொலிண்- வளைநா மூக்கொலிஞ் - அண்ண மூக்கொலிங் - கடை அண்ண மூக்கொலி

ல,ள,ழ ஆகியவற்றை உச்சரிப்பதில் ஒரு பொதுத்தன்மை உண்டு. ல வை உச்சரிக்கும்போது நுனிநா நுனி அண்ணத்தைத் தொட காற்று நாவின் இரண்டு விளிம்புகளாலும் வெளியேறுகின்றது. அதுபோல் ள,ழஆகியவற்றை உச்சரிக்கும்போது நுனிநா மேல்நோக்கி வளைந்து நடு அண்ணத்தைத் தொட காற்று நாக்கின் இரு மருங்காலும் வெளியேற உச்சரிக்கப்படுவதால் இவற்றை மருங்கொலிகள் என்பர்.

ர வை உச்சரிக்கும்போது நுனிநா நுனி அண்ணத்தை வருட ஒலி பிறப்பதால் இதனை வருடொலி என்பர்.

ற வை (அறம்,முறி,விறகு) உச்சரிக்கும்போது நுனிநா நுனி அண்ணத்தைப் பொருந்தி அதிர்வதால் இதனை ஆடொலி என்பர்.

ய,வ ஆகியவை உயிரொலிக்குரிய தன்மையும் மெய் ஒலிக்குரிய தன்மையும் கொண்டிருப்பதால் (ஐ =அய், ஔ=அவ்) இவற்றை அரை உயிர் என்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக