ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

ஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது!

ஆசிரியப் பணியின் மதிப்பு

ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.

மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். 

 போற்றத்தக்கவர்கள்!

சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.