வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

டாக்டர் மு.வ

மலைகளில் உயர்ந்தது இமயமலை. அதனினும் உயர்ந்தது 'எவரெஸ்ட்' சிகரம். அந்தச் சிகரம் மனிதரால் எளிதில் எட்ட முடியாததோர் உயரம். அதனை எட்டியவரை உலகம் சிகரத்தைத் தொட்டவர் என்று உச்சிமேல் வைத்துப் புகழ்கிறது. தமிழ் இலக்கியத்தின் சிகரத்தைத் தொட்டவர் ஒருவர் உண்டெனில், அவர் 'டாக்டர் மு.வ' என்று தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நாவினிக்கப் போற்றப்படும் டாக்டர் மு. வரதராசனார் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
டாக்டர் மு.வ ஓர் படைப்பிலக்கியவாதி மட்டுமன்று. அவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழிப் புலவர். ஒரு தமிழ்ப் பேராசிரியர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் அறவோர். அன்பும் பண்பும் கனிவும் கருணையும் உள்ளம் நிறையக் கொண்டவர்.

1912இல் இம்மண்ணில் தோன்றி 1974இல் இம்மண்ணுலகைவிட்டு மறையுமுன்னர், 'தோன்றின் புகழொடு தோன்றுக' என்னும் வள்ளுவப் பெருமானின் வாக்கிற்கொப்ப நிறைவாழ்வு வாய்ந்த நிறை மனிதர். அறுபத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தாலும் தாம் வாழ்ந்து முடித்த ஆண்டுகளில் 81 நூல்களை எழுதி தமிழுக்கு அணி சேர்த்தவர். அவருடைய வயதைவிட அவர் எழுதி முடித்த நூல்களின் எண்ணிக்கை அதிகம்.
சிறுவர் நூல்கள், நாவல், சிறுகதை, சிந்தனைக் கதை, நாடகம், கடித இலக்கியம், வரலாறு, இலக்கியத் திறனாய்வு, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கிய வரலாறு, சிந்தனைக் கட்டுரைகள், மொழியியல் ஆகிய தமிழ்ப் படைப்புகளோடு சங்க இலக்கியத்தில் இயற்கை (The treatment of Nature in Sangam Literature ), இளங்கோவடிகள் (Iilango Adigal) ஆகிய இரண்டு ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

நாவல்: 1. செந்தாமரை (1946), 2. கள்ளோ காவியமோ? (1947), 3. பாவை, (1948), 4. அந்த நாள் (1948), 5. மலர்விழி (1950), 6. பெற்ற மனம் (1951), 7. அல்லி (1952), 8. கரித்துண்டு (1953), 9. கயமை (1956), 10. நெஞ்சில் ஒரு முள் (1956), 11. அகல் விளக்கு (1958), 12. வாடா மலர் (1960), 13. மண்குடிசை ( 1961).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக