புதன், 27 ஆகஸ்ட், 2014

ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....

பாம்பு சூப் தயாரித்துக் கொண்டி ருந்தவர், அதற்காகத் தான் வெட்டிய பாம்பாலேயே கொத்தப்பட்டு உயிரிழந்தார். அதுவும் தலை வெட்டப்பட்ட பாம்பு 20 நிமிடம் கழித்து அந்தச் சமையல்காரரைக் கொத்தியிருக்கிறது.

இந்த ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது. சீனாவில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் சமையல்காரராகப் பணியாற்றியவர் பெங் ஃபான். இவர் 'இந்தோசைனீஸ் ஸ்பிட்டிங் கோப்ரா' எனும் நாகப்பாம்பு ஒன்றைக் கொன்று, அதை சூப் தயாரிக்கப் பயன்படுத்தினார்.

அதற்காக முதலில் அந்தப் பாம்பின் தலையை வெட்டினார். 20 நிமிடங்கள் கழித்து அந்த வெட்டப்பட்ட தலையை குப்பைக் கூடையில் போடச் சென்றார். அப்போது அந்தத் தலை அவரைக் கொத்தியது. இதனால் அலறிய அவர் சமையலறையிலேயே மயங்கி விழுந்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு மருத்துவரை வரவழைப்பதற்குள் இவரின் உடல் முழுவதும் பாம்பின் விஷம் பரவி, சில நிமிடங்களில் இறந்துவிட்டார்.

பாம்பு சூப் சீனாவில் அதிகம் விரும்பப்படும் உணவாகும். நட்சத்திர அந்தஸ்து உடைய ஹோட்டல்களிலேயே பரிமாறப் படும் இந்தப் பாம்பு வகை உணவுகள் மிகவும் விலை உயர்ந் தவை. பல்வேறு நோய்களைக் குணப்படுத்த சீன மருத்துவத்தில் பாம்புகள் அதிகம் பயன் படுத்தப்படுகின்றன.

கடந்த 40 ஆண்டுகளாக நாகப்பாம்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் பாம்பு நிபுணர் யாங் ஹாங் சாங் கூறியதாவது:

பாம்பின் எந்த ஓர் உடல் பாகம் வெட்டப்பட்டாலும் அதனுடைய உடலும், வெட்டப்பட்ட அந்தப் பாகமும் சுமார் ஒரு மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும். பாம்பின் தலையை வெட்டினாலும், அந்த வெட்டப்பட்ட தலை தனது விஷத்தைக் கக்கி எதிராளியை உயிரிழக்க வைக்கும்.

'நாஜா சியமென்ஸிஸ்' எனும் அறிவியல் பெயர் கொண்ட இந்தப் பாம்பு தென்கிழக்கு ஆசியக் கண்டத்தில் கம்போடியா, லாவோ, பர்மா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது.

சுமார் 3 முதல் 5 அடிகள் வரை வளரும் இந்தப் பாம்புகள், மலைகள், வனப்பகுதிகளில் காணப்படும். இரவாடிகளான இவற்றின் விஷம் மனிதரின் கண்களில் விழுந்தால் அந்தக் கண் நிரந்தர பார்வையிழப்புக்கு உள்ளாகும்" என்றார்.

ஆனால், இத்தகைய உயிரிழப்பு களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் 'எவ்வளவு அதிகம் விஷமுள்ள பாம்புகளைச் சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நன்மைகள் அதிகம்' என்று சீன மக்கள் பாம்பு வகை உணவுகளை மூக்கு முட்ட ருசிபார்க்கிறார்கள்!