வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வித்தியாசமான ஆட்டோ டிரைவர்!

எரிபொருள் விலையுயர்வு குறித்த புலம்பலையும், மீட்டருக்கு மேல் போட்டு குடுப்பா என்ற குரலையுமே பொதுவாக ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் கேட்டிருக்க முடியும்.

ஆனால், இந்த ஆட்டோக்காரர் சற்று வித்தியாசமானவர். தனது சொந்த காசை செலவழித்து தினமும் சுத்தமான குடி தண்ணீரை தாகத்தோடு இருக்கும் பலருக்கு வழங்குகிறார்.

ரகுபதி (30), விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்ப சூழல் காரணமாக ஆட்டோ ஓட்டுவதை தொழிலாக கொண்டுள்ளார்.

அன்றாடம் இவர் சம்பாத்தியம் ரூ.500. இதில், சற்றும் தயங்காமல் ரூ.200-ஐ மற்றவர்கள் தாகம் தீர்க்க தண்ணீர் கேன்களை வாங்கி செலவழிக்கிறார்.

தனது ஆட்டோவில் தண்ணீர் கேன் வைக்கவும், டிஸ்போசிபிள் கிளாஸ்கள் வைக்கவும் பிரத்யேக ஸ்டாண்ட் ஒன்றை அடித்துவைத்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் சுத்தமான குடி தண்ணீர் வழங்கப்படும் எனவும் எழுதிவைத்துள்ளார்.

தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு மட்டுமல்லாது, தான் செல்லும் வழியில் பாதசாரிகள், கட்டுமானப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் தண்ணீர் வழங்கி அவர்கள் தாகம் தீர்க்கிறார்.

இவரது ஆட்டோ வாசகத்தைப் பார்த்து, வெளிநாட்டவர் சிலர்கூட ஆட்டோவை நிறுத்தி தண்ணீர் வாங்கிக் குடித்துள்ளனராம்.

சிறுவயதில் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் ரகுபதி. ஆனால், செழிப்பான அவரது விவசாயக் குடும்பம் திடீரென நொடித்துப்போக படிப்பைத் தொடர முடியாமல் போயிருக்கிறது. பின்நாளில் குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டுநராக ஆகியுள்ளார்.

இருப்பினும் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக இலவசமாக தண்ணீர் கொடுத்து தன்னால் முடிந்த சேவையை செய்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரகுபதி.

உங்களுக்கு கிடைப்பதே ரூ.500, அதில் ரூ.200 செலவழித்துவிடுகிறீர்களே. அந்தப்பணம் உங்கள் குடும்பத்திற்கு உதவுமே என்ற கேள்விக்கு. ஆமாம், 'ஆனால் இந்த சேவை எனக்கு மிகப் பெரிய ஆறுதலை தருகிறதே' என்கிறார் புன்னகையுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக