'நமது' என்று இங்கு குறிப்பிடுவது நவீன இலக்கியவாதிகளையும், தமிழ்குறித்துப் பெருமை கொள்வோர் அனைவரையும் சேர்த்துதான். தமிழ்குறித்து நாம் பெருமை கொள்வதற்கான காரணங்களைத் தந்தவர்கள் கம்பனைப் போன்ற பெரும் கவிகள்தான் அல்லவா? ஆகவே, நம் அனைவரையும் நோக்கி எழுப்பப்படும் முறையீடுதான் இந்தக் கட்டுரை.

ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகள் திருவிழாவுக்கு நிகரானவை. நவீன காலத்தின் ஞாயிற்றுக் கிழமைக்குரிய அசமந்தத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, அன்றைக்கு மிகப் பெரும் உற்சாகத்துடன் காலையில் கூட்ட அரங்குக்கு வந்துவிடுகிறார்கள் ரசிகர்கள். அநேகமாக, காலை 10 மணிக்கு அரங்கில் உட்கார இடம் இருக்கிறதா என்று தேட வேண்டிய நெருக்கடி, தாமதமாக வரும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. பெரிய அரங்கம் ஒன்றில் பலரும் இப்படி இடம்தேடி அலைவதைத் தமிழகத்தில் வேறெந்த இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியாது. கம்பன் விழாவின் கீர்த்தியை இந்த இடத்திலிருந்தே அவதானித்துக்கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் எங்கே?

ஆனால், இந்த நிகழ்வுகளில் அலைமோதுவது முதியவர் கூட்டமும் நடுத்தர வயதினர் கூட்டமும்தான். இளைஞர்கள் இந்த விழா அரங்கை அதிகம் எட்டிப்பார்ப் பதில்லை. (ஓரளவு இளம்பெண்கள்கூட வருகிறார்கள்.) பருவம் கனிந்தவர்கள்தான் இங்கே இப்படி வந்து குழுமுகிறார்கள்; வாழ்வின் அடுத்த நாளை இன்னும் எந்த வகையில் பயனுள்ளதாக்குவது என்கிற ஆர்வம் உள்ளவர்கள், நாளைய வாழ்வின் கவலைகளை நம்முடைய பாரம்பரிய அனுபவத்திலிருந்து எந்த வகை யில் தீர்த்துக்கொள்வது என்கிற தேடல்மிக்கவர்கள் இங்கே வருபவர்களாக இருக்க வேண்டும் என்று கணிக்க முடிகிறது. கம்பன் தன் காவியத் திறத்தால் வெறும் கதைசொல்லியாக இல்லாமல், அதற்கும் மேல், வாழ்வின் உன்னதங்களைத் தன் ஞானத்தால் கண்டறிந்து ஏராளமான ரகசியங்களைக் கவிதை களாக்கிச் சென்றிருக்கிறான். கம்பனை ஆய்கிற இலக்கியச் சொற்பொழிவாளர்கள் இதை உணர்ந்து தங்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதும் அதற் குரிய ரசனையான உரையாற்றலை அவர்கள் கொண்டிருப் பதும் நமக்குப் பரவசத்தை ஊட்டுகிறது. இந்தச் சொற் பொழிவாளர்கள் பார்வையாளர்களைப் போலவே நடுத்தர வயதுடையவர்கள். கம்பனைக் கரைத்துக் குடித்திருக்கிறார்கள். கவிதைகளைச் சட்டென்று மொட்டவிழ வைக்கிறார்கள். ரசிகர்கள் சொக்கிப்போய் மயங்கிவிழுகிறார்கள்.

மேலும், இந்த விழா அரங்கைக் கண்ணுக்கினிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கிறார்கள். ஒரே நிகழ்வாகத் தொடராமல் பல்வேறு உரைப் பகுதி களால் மணிக்கொருமுறை அல்லது இரண்டு மணிக்கொரு முறை மாற்றியமைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கேற்றபடி ராமாயணத்தின் பல்வேறு காட்சிகள் வடிவம் பெறுகின்றன. ஒருவர் உரையாற்றும்போது அந்த உரைக் கேற்ற காட்சியை தங்கள் மனதுக்குள் ஓட விட்டுக் கொள்ளலாம். இவ்வாறு நேரடியாக இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளர் அப்போதே ஓர் இலக்கிய அபிமானி யாக மாறிவிடுவார். ஓர் இலக்கிய விழாவை இத்தனை உத்திகளோடு நடத்துவதற்கு மிகுந்த பொறுமையும் கற்பனை வளமும் திறமும் வேண்டும்.

நம் நம்பிக்கையையும் நம் மொழியையும் நம் உறவுகளையும் இந்த விழா புதுப்பிக்கிறது. என்ன தான் தமிழர்களுக்கு அந்நியமான கலாச்சாரப் படையெடுப்பு களும் ஆங்கில மோகமும் தெருவுக்குத் தெரு தலைவிரித் தாடினாலும், நம்முடைய கால்கள் அவ்வளவு சுலபமாக நம் பண்பாட்டிலிருந்து நிலைபெயர்ந்து விடாது என்று சந்தோஷம் கொள்ள வைக்கிறது. மனக் கவலைகள் மாய்ந்து நம் வாழ்க்கையைப் பற்றிய துயர்கள் கரைந்தோடுவதை நிதர்சனமாக அங்கே உணர முடிகிறது.

கம்பன்: நம் பெருமை

சரி, இப்போது நமக்கு என்ன பிரச்சினை? 'நமக்கு' என்பதுதான் பிரச்சினை. ஆரம்பத்தில் சொல்லியிருப்பதுபோல் நமது சக இலக்கியப் பயணிகள், படைப்பாளர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என்பதுதான் பிரச்சினை. இவர்கள் ஏன் இங்கே வருவதில்லை? இலக்கியம் என்பதை ஒவ்வொருவரும் அவரவர் பயன்பாட்டில் புரிந்துகொண்டாலும்கூட எல்லா இலக்கியக்காரர்களுக்கும் அதன் பொதுவான அம்சங்கள் இருக்கவே இருக்கின்றன. ரசனையாளர்களுக்கு ரசனையும் கருத்தாளர்களுக்குக் கருத்துகளும் எல்லா இலக்கியங்களிலும் கிடைக்கின்றன. நாம் முன்பின் கேள்விப்பட்டிராத மொழிகளில் இருந்தெல்லாம் கவிதைகளையும் சிறுகதைகளையும் நாவல்களையும் அநேகமாக வாசிக்கும் அருமையான நல்வாய்ப்புகள் இப்போது நமக்கு வரமாகவே வந்து வாய்த்திருக்கின்றன. 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஷேக்ஸ்பியரை நாம் இன்னும் தீராத வியப்புடன் இளமைத் துடிப்புடன் கற்கிறோம். ஷேக்ஸ்பியரை ஆங்கிலேயர்கள் கொண்டாடுவதைப் போலவே பிற நாட்டவர்களாகிய நாமும் கொண்டாடுகிறோம். ஷேக்ஸ்பியர் படைப்புகள் போன்ற பேரிலக்கியங்களை வேற்றுமொழியிலும் தேடிச் செல்கிறோம்; அவையும் நம்மைத் தேடிவருகின்றன. அப்படியானால், நம் சொந்தத் தாய்மொழியிலும் இன்னும் எண்ணற்ற இலக்கியச் சுரங்கங்கள் உள்ளனவே, நம்முடைய கடலிலும் முத்துக்கள் விளைந்துள்ளனவே. நமக்கான அந்த ஏகபோகத்தை நாம் இன்னும் அனுபவித்துவிட்டோமா? அவற்றை முழுமையாக வாசித்துவிட்டோமா? நிச்சயமாக இல்லை.

இறுகிய மனநிலை

நம் பள்ளிகளில் அற்பசொற்பமாகச் சில கவிதைகளை ரொம்பவும் மேலோட்டமான முறையிலே வாசித்துவிட்டு, அதனையும் பரீட்சையில் விடையாக எழுதிமுடித்துவிட்டு கடமை முடிந்ததெனக் கைகழுவிவிட்டு, வெளியே வந்துவிட்டோம் நாம். அதுதான் நமக்கு முதல் தீவினையோ என்னவோ? இப்படிப் பரீட்சைக்காக மட்டும் நம் பாரம்பரிய இலக்கியத்தை அச்சுறுத்தும் அல்லது வழக்கத்தில் இல்லாத மொழிப்பிரயோகங்களோடு நம் மாணவர்கள்முன் வைத்துவிட்டோம். அதனால், நிரந்தரமான உள நடுக்கத்தோடு நாம் அவற்றைப் பாராமுகமாக்கிவிட்டோமா? அல்லது காலங்கடந்த இலக்கியப் பனுவல்களை நவீன கால இலக்கியத்தோடு சரிசமமாகப் பாவிக்கக் கூடாது என்கிற இறுகிய மனநிலைக்கு வந்திருக்கிறோமா?

கம்பன் விழா காலம் கடந்தவர்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சியல்ல; அங்கே, நம் தமிழும் நம் வாழ்க்கையும் நம் பண்பாடும்தான் பேசப்படுகிறது. ஆங்காங்கே பழமையின் கூறுகள் இருக்கலாம். அது எங்குதான் இல்லை? நாம் அவர்களிடமிருந்து பெறவும், அவர்கள் நம்மிடமிருப்பதை எடுத்துக்கொள்ளவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நம் மரபின் வேர் களைத் துண்டித்துவிட்டு, வானை அளாவுவது எப்படி?

கற்பனை வறட்சி

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்குமான உறவுப் பாலத்தைச் செம்மை செய்யும்போது, நம் புதிய படைப்புகள் இன்னும் துலக்கம் பெறும். ஏற்கெனவே உலகமயமாக்கலும் அதனோடு வலியுறுத்தப்படுகிற வளர்ச்சியும் நம் இயற்கையையும் நம் வேளாண்மை யையும் பாதித்துள்ளன; இவற்றினால் நாம் நிறைய இழப்புகளுக்கு ஆளாகிறோம். இதனாலேயே நம்முடைய சரிபாதித் திரைப்படங்களில், மேலைநாட்டு வாழ்க்கை மேலைக் கலாச்சாரப் பாதிப்போடு நம் தமிழில் உருவாகின்றன. இது ஒருவகைக் கற்பனை வறட்சி. நம் வாழ்வும் நம் இலக்கியமும் துலக்கம்பெற சாத்தியமான எல்லா வழிகளிலும் பயணிக்க வேண்டும். கம்பன் விழா மேடையேறினால், கம்பனைப் பற்றிப் பேசுவதற்கு நம் அசோகமித்திரனிடமோ நம் பிரபஞ்சனிடமோ நம் தமிழ்ச்செல்வனிடமோ எவ்வளவோ இருக்கக்கூடும். நம் கோணங்கியைக் கொண்டுவந்துவிட்டால்கூட அவருடைய மொழித் திறனில் கம்பனைப் பற்றி நாலு பார்வைகளைக் கொடுக்க முடியும்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறிகள் நாம். கம்பனைப் புறக்கணிப்பது நம் தமிழையும் புறக்கணிப்பதுபோல. இலக்கியத்தையும் வாழ்க்கையையும் தனித்தனியாகப் பார்க்க ஆரம்பித்ததன் விளைவுதான் இந்தப் புறக்கணிப்பு என்று தோன்றுகிறது. தமிழ் மேன்மை பெற வேண்டுமென்றால், தமிழை முன்னிறுத்தி நம் வாழ்வும் மேன்மை பெற வேண்டுமென்றால், கம்பன் உள்ளிட்ட பெரும் படைப்பாளிகளை உள்வாங்கிக்கொண்டு, அவர்களைக் கொண்டாடுவது மிகவும் அவசியம்!

- களந்தை பீர்முகம்மது, தொடர்புக்கு: peermohamed.a@thehindutamil.co.in