சனி, 16 ஆகஸ்ட், 2014

ஒரு கப் டீயில் என்ன இருக்கு?

காலையில் எழுந்து சுடச்சுட டீயையோ காபியையோ குடித்தால்தான் பொழுதே விடிஞ்ச மாதிரி இருக்கும்னு சொல்ற ஆளா நீங்க? நம்மில் பெரும்பாலானோர் இந்த ரகத்தினர்தானே. காபியோ டீயோ இல்லாட்டி அவ்வளவுதான் நமது பல வேலைகள் அதோ கதிதான். நமக்கான பெட்ரோலே அதுதானே. அது இல்லாமல் எப்படி நம்மால் சுறுசுறுப்பாக ஓட முடியும்?

சுறுசுறுப்புக்காக டீ குடிப்பவர்கள் ஷாக் ஆகிற மாதிரியான ஓர் ஆய்வை கிரீன்பீஸ் இந்தியா நிறுவனம் நடத்தியிருக்கிறது. இந்தியாவின் டீ பாரம்பரியமிக்கது என்று நாம் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு நடக்கிறோம். ஆனால் இந்திய டீயில் பூச்சிக்கொல்லி கலந்திருப்பதாகச் சொல்லி நமது அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது கிரீன்பீஸ் இந்தியா. ஆனால் நமது

டீ போர்டு வழக்கம்போல், அதெல்லாம் சும்மா கப்ஸா, எங்கள் டீ தரமானது, சுகாதாரமானது என்னும்ரீதியில் கருத்துத் தெரிவித்துள்ளது. ஆனால் கிரீன்பீஸ் இந்தியா நிறுவனமோ பாரம்பரியமிக்க டீயில் நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளைக் கலப்பது ஆபத்தானது, இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

2013 ஜூன் மாதம் முதல் 2014 மே மாதம் வரை கிரீன்பீஸ் நிறுவனம் டீ தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளது. இந்தியாவின் 11 முன்னணி நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் 49 பேக்குகளை ஆய்வு செய்துள்ளது கிரீன்பீஸ். இந்த நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் தேயிலையை விநியோகிக்கவில்லை, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.

விவசாயத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று இந்தியா 1989லேயே DDT என்னும் மருந்தைத் தடைசெய்துவிட்டது. ஆனால் ஆய்வுசெய்யப்பட்ட மாதிரிகளில் 67 சதவீதத் தேயிலை, காபியில் DDT பயன்பட்டுள்ளது என்பதை ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் தடைசெய்திருக்கும் ஆபத்தான வேதிப் பொருள் 27 சதவீதத் தேயிலையில் கலந்திருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதை இந்தியாவில் பயன்படுத்த சட்டப்படியான அனுமதியில்லை. இதை அதிகம் கலந்தால் கல்லீரல் பாதிப்பு உண்டாகும். இதைப் போன்ற நச்சுத் தன்மை கொண்ட டீதான் நமக்குச் சுறுசுறுப்பு தருகிறதா என்று நினைத்தால் ஷாக்கிங்காக இருக்கிறது. நிம்மதியா டீகூட குடிக்க முடியாது போல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக