செவ்வாய், 13 மே, 2014

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக படிப்புக்கு, நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக படிப்புக்கு, நேற்று முதல்
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதன்முதலாக இணைதளத்தில் விண்ணப்பிக்கும் முறை,இந்தாண்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

2,000 விண்ணப்பங்கள்
சென்னை, வேப்பேரியில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின், 2014-15ம் ஆண்டு இளநிலை பட்ட படிப்புக்களுக்கான விண்ணப்பங்கள், நேற்று முதல் வழங்கப்படுகின்றன.
கால்நடை மருத்துவம், உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய
படிப்புக்களுக்கான விண்ணப்பங்கள், சென்னையில் வேப்பேரி, மாதவரம் உட்பட நாமக்கல், திருநெல்வேலி என, 14 மாவட்ட மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
துவக்க நாளான, நேற்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளரும், துணைவேந்தர்பொறுப்பாளருமான, ஹரிகிருஷ்ணன், மாணவ, மாணவியருக்கு விண்ணப்பங்களை வழங்கி கூறியதாவது: இந்த மாதம், 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதை, ஜூன் 2ம் தேதி மாலைக்குள் சமர்பிக்கவேண்டும். கடந்த ஆண்டை காட்டிலும், 5,000 விண்ணப்பங்கள் அதிகமாக, அதாவது, 20 ஆயிரம் விண்ணப்பங்கள்
அச்சிடப்பட்டு உள்ளன. சென்னையில் 120, நாமக்கல்லில் 80, ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலியில் தலா 40 என,மொத்தம், 280 இடங்கள் உள்ளன. அவை தவிர, கொடுவள்ளியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள உணவு பதப்படுத்துதல் படிப்புக்கு, 20 இடங்களும், ஒசூரில் துவங்கப்பட்டுள்ள கோழியினஉற்பத்தி தொழில்நுட்ப படிப்புக்கு, 20 இடங்களும் உள்ளன.
ஆகஸ்ட் இறுதியில்...
இந்தாண்டு முதல்முறையாக, ஆன்-லைனிலும் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். www.tanuvas.ac.in/ugadmission என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன், புகைப்படம்ஒட்டி குறித்த தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்தாண்டு உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய படிப்புக்களுக்கு வரவேற்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். செப்டம்பர் முதல் வாரம் அல்லது ஆகஸ்ட் இறுதியில், கால்நடை படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.