வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

கைகொடுத்த கணவன் குடும்பம்... கைவசப்பட்ட குரூப் 1 பதவி...


கைகொடுத்த கணவன் குடும்பம்... கைவசப்பட்ட குரூப் 1 பதவி...
வறுமையை விரட்டிய கோட்டீஸ்வரி!

''படிப்புதான் வாழ்வில் நமக்குக் கிடைக்கும் பெரிய ஏணி என்பதற்கு, வறுமையான குடும்பத்தில், ஒன்பது பிள்ளைகளில் ஒருத்தியாகப் பிறந்து, இன்று மாவட்ட சமூக நல அலுவலராகி இருக்கும் நானும் ஓர் உதாரணம்!'' - கோப்புகளை மூடி வைத்து, நம் சந்திப்புக்குத் தயாராகிறார் கோட்டீஸ்வரி.

தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலராகப் பணிபுரியும் கோட்டீஸ்வரி, குழந்தைத் திருமணங்கள் பலவற்றையும் தடுத்து நிறுத்தியவர். அந்தப் பெண் குழந்தைகள் படிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துக்கொண்டிருக்கும் இவரின் மெனக்கெடலில், ஒரு அதிகாரி என்பதைத் தாண்டி, அவரின் தனிப்பட்ட அக்கறை ததும்பி நிற்பதைக் காணமுடிகிறது! தொடர்ந்து ஏழு முறை ஐ.ஏ.எஸ் தேர்வெழுதியும், வெற்றி கைவசப்படாமல் போக, தளராமல் குரூப் 1 தேர்வு எழுதி, அரசுப் பணியில் தனக்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கும் கோட்டீஸ்வரியின் பேச்சில் எளிமை.

''திருவண்ணாமலை மாவட்டத்தில், குலமந்தை என்ற குக்கிராமத்தில் பிறந்தேன். எங்கள் வீட்டில் ஆறு பெண்கள், மூன்று பையன்கள் என்று ஒன்பது பிள்ளைகள். வறுமை காரணமாக என்னுடன் பிறந்தவர்கள் யாரையும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்கவில்லை. நான் மட்டும் பிடிவாதமாக முன்னேறி வந்தேன். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியின் முதல் மாணவியாக வந்தேன். அந்தச் சமயத்தில், திறன் அறியும் போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பிடித்து, மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு வாங்கினேன். அன்றிலிருந்து, 'நாமும் கலெக்டராக வேண்டும்' என்கிற கனவு துரத்த ஆரம்பித்தது'' என்பவருக்கு, கல்லூரிப் படிப்பே கேள்விக்குறியாகும் என்பது அப்போது தெரியவில்லை.

''பள்ளிக்கூட ஆசிரியர் தேவராஜன் சாரிடம், கலெக்டராகும் என் ஆசையைச் சொன்னேன். வகுப்பில் முதல் மாணவியான என்னை, என் படிப்புக்கு உதவவேண்டி தத்தெடுத்துக்கொண்டார் அவர். ஆனாலும், எங்கள் வீட்டில் படிக்க வைக்க மறுத்துவிட்டார்கள். கண்ணீரும் கவலையுமாகச் சென்ற நாட்களின் இடையில் ஒரு நாள், அந்த நல்வழி கிடைத்தது. அப்போது சென்னையில் அறை எடுத்துத் தங்கி கூலி வேலை பார்த்துக்கொண்டிருந்தார் அண்ணன். என் கையில் 100 ரூபாயைக் கொடுத்து, 'நீ உன் அண்ணன்கூட தங்கி எப்படியாவது படிச்சுப் பொழச்சுக்கோ' என்று அனுப்பிவைத்தார் அம்மா. நூறு ரூபாயுடன் அண்ணனின் அறைக்கு வந்து சேர்ந்தேன்'' எனும் கோட்டீஸ்வரி, உழைத்துக்கொண்டே படித்திருக்கிறார்.

''17 வயதில் ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தப் பணத்தில் சென்னை, பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மூலமாக பி.பி.ஏ படித்தேன். தொடர்ந்து எம்.சி.ஏ, எம்.ஏ., சமூகவியல் படித்து, மூன்று பட்டங்களையும் பெற்றேன். இதற்கிடையே ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அடைந்து, நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். ஆனால், தேர்வாகவில்லை. பிறகு, எனக்குத் திருமணம் முடிய, கணவரின் ஊக்கத்தில் பகுதிநேர வேலையை விட்டு, ஐ.ஏ.எஸ் தேர்வில் தீவிரமானேன்.

இரவு இரண்டு மணி வரைகூட வேலை பார்த்துவிட்டு வரும் கணவரைப் பார்க்கும்போது, வீட்டுச் செலவுகளுக்கு என்னால் பங்களிக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கும். அவரோ, 'படிக்கிறது மட்டும்தான் இப்போ உன் பொறுப்பு' என்று ஆதரவாகச் சொல்லும் போது, இவருக்காகவாவது வெற்றி பெறவேண்டும் என்று வைராக்கியம் வளரும். தொடர்ந்து இரண்டு முறை தேர்வெழுதி, முதன்மைத் தேர்வில் தேர்ச்சியடைந்து, நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வெளியேறினேன்.

இதற்கிடையில் குழந்தையும் பிறந்தது. ஆறு மாதம் வரை குழந்தையோடு இருந்தேன். பிறகு என் மாமனார், மாமியார் இருவரும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, 'நீ கவலைப்படாம படிம்மா...' என்றார்கள். ஏழு முறை தேர்வெழுதி, மூன்று முறை நேர்முகத் தேர்வுக்குத் தகுதி அடைந்தும், ஐ.ஏ.எஸ் கனவு நிறைவேறவே இல்லை. எனக்கான ஏழு வாய்ப்புகளும் முடிவடைந்துவிட்டன. ஆனாலும், நான் தளர்ந்துபோகவில்லை. குரூப் 1 தேர்வுக்குத் தயாரானேன். இதில் வெற்றிபெற்ற எனக்கு, மாவட்ட சமூக நல அலுவலர் பதவி கிடைத்தது'' என்பவர், அதே ஆண்டில் எழுதிய மற்றொரு குரூப் 1 தேர்வில் தொழிலாளர் அலுவலராகவும் தேர்வுபெற்றிருக்கிறார்.

''வறுமையிலேயே வளர்ந்தாலும், பதவி என்பதை வருமானத்துக்கான வாய்ப்பாக பார்க்கவில்லை. என் பங்களிப்பு, சமூகத்துக்குப் பயனளிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவதையும், வரதட்சணைக் கொடுமை மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களை மீட்பதையும் இந்தப் பதவியில் என்னுடைய முக்கியப் பொறுப்புகளாகக் கொண்டேன்.

ஒரு முறை ஏ.புதுப்பட்டி என்ற ஊரில் ஒரே நேரத்தில் நான்கு பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. போலீஸ் பாதுகாப்புடன் விரைந்து சென்று தடுக்க முயன்றேன். கிட்டத்தட்ட நூறு பேருக்கும் அதிகமாக எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். சட்டம், குற்றம், அரசு அதிகாரி என்பதைப் பற்றியெல்லாம் சட்டை செய்யாத அந்தக் கூட்டத்தின் நடுவே நின்ற நிமிடங்கள், இப்போதும் நினைவில் இருக்கிறது. 19 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமளவுக்கு, கலவரமான சூழல் அது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், அந்தத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியது, பெருநிம்மதி.

குழந்தைத் திருமணங்களில் இருந்து மீட்கப்படும் பெண்கள் தொடர்ந்து படிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதில் முனைப்பாக இருப்பேன். இதுவரை சமூக நலத்துறை மற்றும்  வருவாய்த்துறை மூலமாக குழுவாக இணைந்து 150-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களை தடுத்தி நிறுத்தியிருக்கிறோம். பெண் குழந்தைகளில் பலரை காப்பகத்தில் சேர்த்து, நன்கொடைகள் பெற்றுக்கொடுத்து, அவர்கள் படிப்புக்கு ஏற்பாடுகள் செய்வேன். ஆனால் ஏ.புதுப்பட்டியில் திருமணம் நிறுத்தப்பட்ட அந்த நான்கு பெண்களும், எட்டாம் வகுப்புகூட படித்து முடிக்காதவர்கள். அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து தொடர்ந்து படிக்கச் சொன்னோம்.

சுயதொழில் செய்வதற்கு, தையல் மாதிரியான பயிற்சிகளை கற்றுக்கொள்ள அழைத்தோம். ஆனால், அந்த சுற்றத்திடமிருந்து அவர்களை வெளிக்கொண்டு வந்து, எந்த ஆக்க பூர்வமான முயற்சியையும் எடுக்க வைக்க முடியவில்லை என்ற வருத்தம் இன்றும் எனக்கு உள்ளது'' எனும் கோட்டீஸ்வரி, சென்ற வருடம் 'சிறந்த அலுவலரு'க்கான விருதை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றிருக்கிறார். டெல்லி மாணவி நிர்பயாவுக்கு நிகழ்ந்த பாலியல் வன்முறையின் ஓராண்டு நினைவு தினத்தில், தேசிய மகளிர் ஆணையம் டெல்லியில் நடத்திய கருத்தரங்கில், தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் கலந்துகொண்டு உரையாற்றி வந்திருக்கிறார்.

பலர் பயனடைய, தொடரட்டும் இவர் பயணம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக