வியாழன், 14 ஆகஸ்ட், 2014

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ்....,

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காரணமாக, மேற்கு ஆப்பிரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எபோலா வைரஸ் குறித்த ஆரம்ப நிலை அறிகுறிகளை அறிவதில் சிரமம் உள்ளதால், இந்த நோய் வேகமாக பரவுகிறது என்றும், அசாதாரண நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

2013-ஆம் ஆண்டு, மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் 2 வயது சிறுவனிடம் இந்த நோய் தென்பட்டது. அதிலிருந்து மெதுவாகப் பரவிய இந்த நோய் 2014-ஆம் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் வெளிப்பட்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் முழுவதிலும் பரவி உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, 128 பேருக்கு புதிதாக இந்த நோய் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. ஆகஸ்ட் 10 மற்றும் 11- ஆம் தேதிகளில் மட்டும், கினியா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,975 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1,069 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜெனிவாவில், உலக சுகாதார நிறுவனத் தலைவர் மார்கரெட் சான் கூறும்போது, " எபோலா நோய்க்கு 10 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளோர் தங்களது தினசரி தேவைகளான அத்தியாவசிய பொருட்கள், உணவு என அனைத்தையும் பெறுவதற்கு சிரமப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருமே எல்லை நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆகையால், அவர்களிடமிருந்து மற்ற நாட்டினருக்கு நோய் பரவுக்கூடிய அபாயம் அதிக அளவில் உள்ளது.

நோய்த் தடுப்புக்கான வழிகளை உடனடியாக மேற்கொள்ளக்கூடிய நிலை தற்போது இல்லை. அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பதனால் மட்டுமே நோய் பரவுவதை தடுக்க இயலும் நிலை உள்ளது.

தற்போது கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை கவனத்துடன் மேற்கொள்ளாவிட்டால், விரைவில் அதிக அளவிலான மனித இழப்புகளை ஏற்படுத்த நேரிடும்.

எபோலா பரவுவதற்குரிய முக்கிய இடமாக ஒவ்வொரு நகரங்களின் விமான நிலையமும் உள்ளது. நோயை மற்ற நாடுகளிருந்து இறக்குமதி செய்துவிடக்கூடிய அபாயத்தை ஒவ்வொரு நாடுகளும், அதன் நகரங்களும் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கினியா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளில், நோய் அபாயகரமான நிலையில் உள்ளது. நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் இங்கு மிக சுலபமாக இருக்கும். இதனால் இந்த நாடுகளின் எல்லையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நோய் உள்ளுக்குள்ளே இருந்து அது தெரியாமல், எல்லைத் தாண்டிச் சென்று நோய் பரவுவதை தடுக்க முடியும். முக்கியமாக, எல்லை ஓரங்களில் உள்ள மக்களை தீவிர கண்கானிப்பில் வைக்க வேண்டும்.

ஆனால், இந்த நடவடிக்கை அவ்வளவு சுலபமானதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துவது என்பது மிகவும் கடினம். மருத்துவர்களுக்கு எல்லை என்பது கிடையாது. மருத்துவர்கள், செவிலிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பாதிப்பு உள்ள பகுதிக்கு கொண்டுவர வேண்டும். ஆகையால் நாம் தற்போது நெருக்கடியான நிலையில் தான் உள்ளோம்.

கிராமப்புரங்களில் நோய் தீவிரமடைந்து வருகிறது. அவர்களை மருத்துவக் குழுக்கள் சென்றடைவதில் சிரமம் உள்ளது. இதே நிலை முக்கிய நகரங்களிலும் உள்ளது. மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.

சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் கைக்கோர்க்க வேண்டும். மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த விவகாரம் முன்னெப்போதும் இல்லாத ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை செய்த 170-க்கும் அதிகமான சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தற்போது எபோலா நோய் தொற்று ஏற்பட்டுவிட்டது, இதுவரை இதனால் 80 அதிகாரிகள் இறந்துள்ளனர்" என்றார்.



S

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக