திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கல்விச் சேவை செய்வதில் ‘நோட் புக் தாத்தா’ ...'நான் பெற்ற இன்பத்தை இந்த வையகம் பெறலாம். ஆனால், நான் பட்ட துன்பத்தை பெறக் கூடாது. அதனால்தான் என்னால் முடிந்த சேவைகளை செய்வ தோடு மதுவுக்கு எதிரான போராட்டங்களையும் தீவிரப்படுத்தி வருகிறேன்' என்கிறார் வராகி சித்தர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வராகி சித்தரை 'நோட் புக் தாத்தா' என்று சொன்னால்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு தெரிகிறது.

இவர், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தியும், ஜாதகம் கணித்துக் கொடுத்தும் அதில் கிடைக்கும் வருமானத்தை ஏழை பள்ளிக் குழந்தைகளுக்காக செலவழித்துக் கொண்டிருக்கிறார். இவரது ஆதரவில் பெற்றோரை இழந்த ஒரு மாணவி பி.காம்., படித்துக் கொண்டிருக்கிறார். தந்தையை இழந்த மற்றொரு மாணவி 12-ம் வகுப்பு படிக்கிறார். கல்விச் சேவை செய்வதில் நாட்டம் வந்தது எப்படி? வராகி சித்தரே விவரிக்கிறார்.. எனது குருநாதர் ராதாகிருஷ்ணன், எனக்கு தீட்சை கொடுக்கும்போது, 'நீ தனியாக மூச்சை அடக்கி தவம் ஏதும் இருக்க வேண்டியதில்லை. ஏழைக் குழந்தைகளின் அறிவுக் கண் திறக்க அவர்களுக்கு கல்விச் சேவை செய். அதுவே ஆயிரம் தவங்கள் இருந்ததற்கு சமம். உலகுக்கு என்ன தேவை என்று நீ பார்; உனக்குத் தேவை என்ன என்பது எனக்குத் தெரியும்' என்று சொன்னார்.

எல்லோரும் சரஸ்வதி பூஜை தினத்தில் பிள்ளைகளுக்கு சுண்டலும், பொரியும் கொடுப்பார்கள். இதற்கு பதிலாக பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு ஏன் நோட்டுப் புத்தகங்களாக வாங்கிக் கொடுக்கக் கூடாது' என்று நண்பர்களிடம் கேட்டேன். 2000-ம் ஆண்டில் அந்தக் கேள்வியில் இருந்துதான் கல்விச் சேவையை ஆரம்பித்தேன். அன்றைக்கு ஒரு குயர் நோட்டு 2 ரூபாய்தான். கையில் இருந்த காசுக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கி, ஆளுக்கு ஒன்று கொடுத்தோம். இப்போது, கல்லிடைக்குறிச்சி யில் என்னிடம் நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் வாங்கிப் படிக்காத பிள்ளைகள் இருக்கவே இருக்காது. அந்த அளவுக்கு கடந்த 14 ஆண்டுகளில் கல்விச் சேவை செய்ய இறைவன் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறான். நான் பிரம்மச்சாரியாக இருப்பதால் எனக்கான தேவைகள் குறைவு. அதனால், இன்றைய வருமானத்தை மறுநாளே பள்ளிக் குழந்தைகளுக்காக செலவழித்து விடுவேன்.

என்னை யாராவது பார்க்க வந்தாலும் சால்வைக்கு பதிலாக நோட்டுப் புத்தகங்கள், பென்சில், பேனாக்களைத்தான் வாங்கி வருவார்கள். ஏழைப் பிள்ளைகள் படிப்புக்காக உதவி செய்துகொண்டே 5 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறேன். மதுவின் கொடுமை என்ன என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 1982-ல் நான் நடத்துநராக பணி செய்தபோது மதுவுக்கு அடிமையாகி அவமானப்பட்டேன். அதெல்லாம் அழியாத கோலமாக என் மனதில் இருக்கிறது. இன்றைக்கு, எட்டாவது படிக்கும் சில மாணவர்கள் கூட குடித்துவிட்டு பள்ளிக் கூடத்துக்கு வருகிறார்கள். 'பொல்லாத மகனைப் பார்க்கலாம். ஆனால், பொல்லாத தாயை பார்க்க முடியாது' என்று ஆதிசங்கரர் சொன்னார். ஆனால் இன்றைக்கு, கணவன் மதுவுக்கு அடிமையாகி மயங்கிக் கிடப்பதால் மற்றொரு ஆணுக்காக பெற்ற பிள்ளையையே கொலை செய்கிறாள் தாய். அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் மது. மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் உண்ணா விரதம் இருக்கப் போனேன். போலீஸ் கைது செய்துவிட்டது.

திருச்செங்கோட்டில் இருந்து சென்னை வரை 400 கி.மீ. தூரம் மதுவுக்கு எதிராக சைக்கிள் பிரச்சாரம் செய்தேன். நெல்லை மாவட்டத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், காந்தி சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து தொடர்ச்சியாக மதுவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறேன். 2016-ல் ஆட்சிக்கு வர நினைப்பவர்கள் 'மதுக்கடைகளை மூடுவோம்' என்று சொல்லிப் பாருங்கள்.மக்கள் உங்களிடமே ஆட்சியை ஒப்படைப்பார்கள்' வரம் கொடுப்பதுபோல் பேசினார் வராகி சித்தர்.